search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண் கொல்ல முயற்சி"

    விருத்தாசலத்தில் சாலையில் நடந்து சென்ற இளம்பெண் ஒருவரின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    விருத்தாசலம்:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த நகர் பகுதியை சேர்ந்தவர் அசோகன். இவரது மகள் அசானா(வயது 20). இவர் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இன்று காலை அசானா வழக்கம்போல் உளுந்தூர்பேட்டையில் இருந்து விருத்தாசலத்திற்கு பஸ்சில் வந்தார். பின்னர் பஸ்சில் இருந்து இறங்கி வேலை பார்க்கும் இடத்திற்கு தனது தோழியுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். சரோஜினி நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவர்களின் பின்னால் மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் மோட்டார்சைக்கிளை அந்த பகுதியில் நிறுத்தினார்.

    பின்னர் அவர் அசானாவை பின்தொடர்ந்து சென்றார். அந்த மர்மநபர் தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை எடுத்து திடீரென அசானாவின் கழுத்தை அறுத்தார். இதில் அவர் கழுத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. அசானாவின் தோழி காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு வந்தனர். அவர்களை கண்டதும் அந்த மர்மநபர் மோட்டார்சைக்கிளில் தப்பி ஓடிவிட்டார்.

    பின்னர் படுகாயமடைந்த அசானாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அசானாவிற்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து விருத்தாசலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் அசானா கூறியதாவது:-

    எனக்கும், கள்ளக்குறிச்சி அருகே உள்ள கொங்குராயப்பாளையம் பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் அந்த வாலிபரை எனக்கு பிடிக்கவில்லை என கூறிவிட்டேன். ஆனால் அந்த வாலிபர் தொடர்ந்து என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்தார். நான் அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தேன்.

    இந்தநிலையில் என்னை மர்மநபர் ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதற்கும் என்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்திய வாலிபருக்கும் தொடர்பு உள்ளது என சந்தேகிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குபதிவு செய்து தப்பியோடிய மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். #Tamilnews

    ×